கிரிக்கெட்

புஜாரா அதைச் செய்தால், என் ஒரு பக்க மீசையை எடுக்கிறேன் – அஷ்வின் ஓப்பன் சேலஞ்ச்!!!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சுவர் என்று அழைக்கப்படுபவர் செத்தேஷ்வர் புஜாரா. தன் தடுப்பாட்டத்தின் மூலம் உலகின் முன்னணி பவுலர்களையே திணறடிப்பவர் புஜாரா. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதைக் காண்பித்தார் புஜாரா. குறிப்பாக 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, 200 பந்துகளுக்கு மேல் விளையாடி அரைசதம் விளாசியது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது. இப்படி புஜாராவின் பேட்டிங்கிற்கு ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் நிலையில், அவருக்கு வெளிப்படையாக ஒரு சவாலை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

அஷ்வினின், தன் யூடியூப் சேனலில், இந்திய கிரிக்கெட்டி அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அந்த காணொலியின் நடுவில் தான் புஜாராவுக்கு ஒரு சவாலை விடுத்தார்.

வீடியோவில் 32வது நிமிடத்தில் புஜாராவின் சவால் குறித்துப் பேசுகிறார் அஷ்வின்:

அஷ்வின், ‘புஜாரா எப்போதும் தடுப்பாட்டத்தில் மட்டும் தான் வல்லவராக இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் கிரீஸுக்கு வெளியே வந்து விளையாடுவது போல அவர் விளையாடுவதே கிடையாது.

எதிர் வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், எதாவது ஒரு ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக புஜாரா, கிரீஸுக்கு வெளியே வந்து பந்தைத் தூக்கி அடிக்க நான் சவால் விடுகிறேன். அப்படி அவர் செய்து விட்டால் நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே விக்ரம் ரத்தோரிடம் சொல்கிறார்.

அதற்கு விக்ரம், ‘இது ஒரு கவனிக்கத்தக்க சவால்தான். ஆனால், புஜாரா இந்த சவாலை எடுத்துக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். காரணம், அவரது பேட்டிங் அதுவல்ல. குறிப்பாக பந்தை தரையோடு தரையாக அடித்து விளையாடுவதில் தான் புஜாரா கவனம் செலுத்துவார். அப்படி செய்வது தான் அவரது பலமும் கூட. அவர் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நானும் சொல்ல மாட்டேன்.

இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் புஜாராவும் ஒருவர். அவர் பேட்டிங் ஜாம்பவான். பயிற்சியாளர்களின் கனவு போன்றவர். மிகக் கச்சிதமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு, சாந்தமாக கிரிக்கெட் களத்தில் விளையாடக் கூடியவர். அவர் அப்படியே விளையாட வேண்டும் என்பது தான் என்னுடை ஆசை’ என்று அஷ்வினுக்கு சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தார்.

பிப்ரவரி மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், புஜாரா, அஷ்வினின் சவாலை ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version