இந்தியா

பஞ்சாபில் சித்து முதல்வர் வேட்பாளரா? அரவிந்த் கெஜ்ரிவாலின் சூப்பர் பிளான்!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பாஜகவில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்து, அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் முதல்வர் அம்ரித் சிங் அவர்களுக்கும் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சித்து காங்கிரசில் அதிருப்தியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நவ்ஜோத் சிங் சித்து தனது டுவிட்டரில் ஆம் ஆத்மி கட்சியை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள், விவசாயிகள் பிரச்சனை, சீக்கியர்களின் புனித நூல் எரிக்கப்பட்ட பிரச்சனை ஆகிய பிரச்சனைகளை ஆம் ஆத்மி கட்சி நன்றாக அறிந்து வைத்துள்ளது என்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் சித்து புகழ்ந்து டுவீட்டில் பதிவு செய்துள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சீக்கியர் தான் முதல்வராக வேண்டும் என சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணைந்தால் அவர் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே வலுவாக இருக்கும் நிலையில் சித்துவை முன்னிறுத்தி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சியை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version