சினிமா

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

Published

on

இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் இன்று வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரசிகர்களை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ள படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் முத்தையா ஸ்டைல் படத்தில் அருள்நிதி நடித்தது போலத்தான் இந்த படம் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் மேலத்தெருவில் வசிக்கும் மூர்க்கையனும் கீழத்தெருவில் வசிக்கும் பூமியும் சிறு வயதில் இருந்தே ஒரு சம்பவத்தால் நண்பர்களாக மாறுகின்றனர்.

#image_title

ஆனால், சாதிய வேறுபாடு காரணமாக இவர்களின் நட்புக்கு மூர்க்கையனின் அப்பாவுக்கே பிடிக்கவில்லை.  அந்த ஊரில் ஒரு பெரிய அரசியல் மாநாட்டை வில்லன் நடத்த திட்டமிடுகிறார்.

அதற்காக ஊர் முழுக்க பேனர்களை வைக்கிறார். கீழத்தெருவில் பூமி வீட்டுக்கு பக்கத்தில் வைக்கப்பட்ட பேனரை பூமி கிழித்து எறிகிறார். அங்கே நடக்கும் பிரச்சனையில் தனது நண்பனுக்காக மீசை முறுக்கிக் கொண்டு எதிரிகளை பந்தாடுகிறார் மூர்க்கையன்.

அதன் காரணமாக அந்த அரசியல் மாநாடே அந்த ஊரில் நடக்க முடியாமல் போக பூமியை வில்லன் கேங் போட்டுத் தள்ளிவிட்டு அந்த பழியை மூர்க்கையன் மீது சுமத்துகின்றனர்.

போலீஸில் சிக்காமல் தப்பிக்கவும், தனது நண்பனின் மறைவுக்கு பழிவாங்கவும் கழுவேத்தி மூர்க்கனாக அருள்நிதி அசுர அவதாரம் எடுப்பது தான் மீதிக் கதை.

ஆக்‌ஷன் காட்சிகளில் அருள்நிதி இதுவரை காட்டாத அளவுக்கு ஆக்ரோஷத்தை தனது நடிப்பில் காட்டி உள்ளார். சார் நீங்க ஒரு வில்லேஜ் ஹீரோ பீஸு சார் என பாண்டிராஜ் எப்படி வம்சம் படத்தில் இவரை கண்டு பிடித்தாரோ பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் கெளதம் ராஜும் அருள்நிதிக்கு உள்ளே இருக்கும் காட்டானை கண்டுபிடித்து கச்சிதமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

#image_title

ஹீரோயினாக வரும் துஷாரா விஜயன் கதையில் பெருசாக ரெனேவாக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்றாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களை டார்கெட் செய்து ஸ்கோர் செய்து விடுகிறார்.

சார்பட்டா பரம்பரை, பத்து தல அடுத்து ஜெயிலர் என வரிசையாக சந்தோஷ் பிரதாப் பல படங்களில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் அவருக்கு நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதனை எந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொண்டார். இமான் பின்னணி இசை சிறப்பாக இருந்த அளவுக்கு பாடல்கள் சிறப்பாக இல்லை.  அவ கண்ண பார்த்தாக்கா பாடல் மட்டும் விதிவிலக்கு.

கொஞ்சம் பழைய டெம்பிளேட் கதை, கிராமத்து ஆக்‌ஷன், சாதிய பிரச்சனை, நண்பன் மரணத்துக்கு பழிவாங்குவது என கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், அருள்நிதியின் கம்பீரமான ஆக்டிங்கிற்கும் மேக்கிங்கிற்காகவும் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.

கழுவேத்தி மூர்க்கன் – கர்ஜனை!

ரேட்டிங்: 3.5/5.

seithichurul

Trending

Exit mobile version