கட்டுரைகள்

என் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா? கோழைத்தனமா?

Published

on

கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியாகினர். இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பு ஆகும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் இதனைவைத்து பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது, பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியில்லை போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்க வகையில் இல்லை.

பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என எழுந்துவரும் கருத்துக்கள் ஆரோக்கியமான கருத்துக்கள் கிடையாது. சமீபத்தில் டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடுதலுக்கான உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரர்கள் ஜி.எம்.பஷீர், கலில் அகமது ஆகியோருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை கடுமையாக சாடியுள்ளது. வருங்காலத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து இந்தியாவுடன் நடைபெறவிருந்த எல்லா பேச்சுவார்த்தைகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்துள்ளது. மேலும் டெல்லியில் நடைபெறும் போட்டிகளில் ஆண்களுக்கான 5 மீட்டர் ரேபிட் ஃபயர் சுற்றில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் தகுதியையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கமிட்டியும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. பெரும் முயற்சி மேற்கொண்டும் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போட்டியிடுவதற்கு இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு பாகிஸ்தானுக்கு இல்லை, இந்தியாவுக்கு தான் என்பதை ஏன் இந்தியா உணரவில்லை.

கிரிக்கெட்டிலும் இந்த நிலைதான் உள்ளது, பாகிஸ்தானுடன் இந்தியா வர உள்ள உலகக்கோப்பை போட்டியில் மோதக்கூடாது என பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இதனால் பாதிப்பு பாகிஸ்தானுக்கு இல்லை. இந்தியாவுக்கு தான். இந்தியா பாகிஸ்தானுடன் மோதவில்லை என்றால் இந்தியா தான் புள்ளிகளை இழக்க நேரிடும். நாக் அவுட் போட்டி என்றால் இந்தியா உலகக் கோப்பையையே இழக்க நேரிடும்.

பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பதை விட அவர்களுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். 1999-இல் கார்கில் போருக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை தோற்கடித்தது. அதுபோல இந்த முறையும் இந்தியா பாகிஸ்தானை ஆடுகளத்தில் நேருக்கு நேர் சந்தித்து அவர்களை தோற்கடிக்கவேண்டும். அதில் தான் இந்தியாவின் வீரம் உள்ளது. பாகிஸ்தானுடன் விளையாடாமல் புறக்கணிப்பது என்பது போரிடாமலே தோற்றுப்போவது ஆகும். இது முற்றிலும் கோழைத்தனம். இந்தியா வீரமாக இருக்கவே நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம், கோழையாக இருப்பதற்கல்ல. தீவிரவாதத்துக்கு தீர்வு காண வேண்டும், தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் அதில் இங்கு யாருக்கும் மற்றுக்கருத்து இல்லை. ஆனால் தீவிரவாதத்துக்கு பதிலடி இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது அல்ல என்பதே இதன் நோக்கம்.

seithichurul

Trending

Exit mobile version