இந்தியா

உச்ச நீதிமன்றமும் கைவிரித்துவிட்டது: கைது விளிம்பில் ப.சிதம்பரம்!

Published

on

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறியதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரது டெல்லி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் வீட்டில் நோட்டீஸை ஒட்டிச்சென்றனர்.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் முற்றியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version