இந்தியா

ஒரு ஏழைத் தாயை இனிமேலும் ஏமாற்றாதீர்கள்: அமித் ஷாவை சந்தித்த அற்புதம்மாள்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்த விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதனையடுத்து பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் இந்த விடுதலை தொடர்பான முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 10 மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் இதுவரை முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விடுதலை செய்ய கோரிக்கை மனு அளித்துள்ளார் விசிக எம்பி தொல்.திருமாவளவன். இவருடன் சக எம்பியான ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் சென்றனர்.

அற்புதம்மாளும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனது மகனை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து விவரித்தார். அப்போது, அமித் ஷா எங்களை நன்றாக வரவேற்று பேசினார். எங்கள் கோரிக்கையை மனுவாக அளித்துள்ளோம். ஆலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாகச் சொன்னார்.

பேரறிவாளனுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன் கூறியது குறித்தும் மனுவில் தெரிவித்திருக்கிறோம். வேண்டுமென்றால் அவரிடம் விசாரிக்கலாம். பதில் வரும் என்று காத்திருக்கிறோம். இந்தத் தகவல் ஆளுநருக்கு செல்லும் என்று கூறுகிறார்கள். ஆளுநர் ஒரு கையொப்பமிட்டால் அனைவரும் விடுதலையாகிவிட வாய்ப்புள்ளது. அதனை எதிர்பார்த்துதான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். ஒரு ஏழைத் தாயை இனிமேலும் ஏமாற்றாதீர்கள் என கண்ணீர் மல்க கூறினார் அற்புதம்மாள்.

seithichurul

Trending

Exit mobile version