கிரிக்கெட்

ஐபிஎல்-ல் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர் மகன் – ஏல விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தங்களுக்குப் பிடித்தவர்களை ஐபிஎல் தொடரில் இருக்கும் அணிகள் தேர்ந்தெடுக்கும். இந்தப் பட்டியலில் தான் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார்.
2020 – 21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்தக் அலி டிராஃபி தொடரில் தான், முதன்முதலாக முதல்-தர டி20 போட்டிகளில் விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர். அதில் அவர் இரண்டு போட்டிகளை மும்பை சார்பில் விளையாடி, 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அந்த இரு போட்டிகளில் அவரின் பவுலிங் எகானமி 9.57 ஆகும். 21 வயதாகும் அர்ஜுனுக்கு அது ஒரு நல்லத் தொடக்கமாக அமையவில்லை.

இதைத் தொடர்ந்து தான், வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கவுள்ள விஜய் ஹஜாரே டிராஃபியில் தேர்வு செய்யப்பட்ட மும்பை அணியில் அர்ஜுன் இடம் பெறவில்லை. இருப்பினும் இந்த ஐபிஎல் ஏலப் பட்டியல் தேர்வு அவருக்கு சற்று ஆறுதல் அளிக்கலாம்.

உள்ளூர் போட்டிகளில் சரியாக செயல்படாத ஒரு வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் எப்படி இடம் கிடைத்தது என்னும் கேள்விகளும் சர்ச்சைகளும் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில், அர்ஜுனின் அடிப்படை வாங்கும் ஏல விலையாக 20 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, தன் முதல் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version