இந்தியா

இன்னொரு புல்வாமா சம்பவம் நடக்கும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!

Published

on

இந்த வாரம் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரம் எதிரொலித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதுதான் கடந்த இரண்டு தினங்களாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் விவாத பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் இது தொடர்பாக உடனடியாக கூட்டப்பட்டது. இதில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இந்தியா எடுத்துள்ள முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. இந்த முடிவு ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தியா இந்துக்களுக்கான நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலானது. இஸ்லாமியர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆட்சி செய்ததால் அவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கின்றனர். இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்பதே அவர்களது விருப்பம் என கூறினார் இம்ரான் கான்.

மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இன்னொரு புல்வாமா தாக்குதல் ஏற்படலாம் என எச்சரித்தார் இம்ரான் கான். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மோடி அரசின் முடிவால் காஷ்மீர் மக்களை நசுக்க முடியாது. இதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் தலையிட வேண்டும். இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் அரசு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்று முறையிடும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version