தமிழ்நாடு

மகாபாரதத்தை ஆயிரம் முறை படித்தால் மோடி போல் பிரதமர் ஆகலாம்: பாஜக தலைவர் அண்ணாமலை

Published

on

மகாபாரதத்தை ஆயிரம் முறை படித்தால் மோடி போல் பிரதமர் ஆகிவிடலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மனிதன் முழுமையாக வேண்டுமென்றால் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதே கருத்தை நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். நேற்று செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் வாழ்வதற்குக் கற்பித்த நூல் தான் திருக்குறள். இந்தியாவில் வாழ்வதே ஒரு பாக்கியம் தான். நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயரத்தைத் தொடலாம். சரியான விஷயங்களைச் செய்யும் போது நம்மால் பல இடங்களுக்குச் செல்ல முடிகிறது.

நமது இளைய சமூகத்தினர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். இது நாள் வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்து இருப்பேன். அதேபோல சுமார் 12 ஆயிரம் புத்தகங்களைப் பராமரித்து வருகிறேன். எனது அலுவலகம், எனது வீடு என எந்த இடத்திற்குச் சென்றாலும் கூட குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் தொடங்கி உள்ளூர் வரை அனைத்து தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களையும் நாம் வாசிக்க வேண்டும்.

புத்தகங்களில் தான் வாழ்க்கைத் தத்துவங்கள் நிரம்ப உள்ளன. புத்தகங்களைப் படிக்கத் படிக்க தான் நாம் மனிதன் ஆகிறோம். சாதி, மதங்களைக் கடந்து இங்கு மனிதம் பரவ நாம் அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குறிப்பாக மகாபாரதத்தைக் குறைந்தது ஆயிரம் முறையாவது படிக்க வேண்டும். அதில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நாம் நேரில் பார்ப்பது போல் இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியைப் போல முக்கிய பதவிகளில் அமர வேண்டும் என்றாம் அதிகப்படியான புத்தகங்களை நாம் படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரியாததை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version