தமிழ்நாடு

தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்: அண்ணாமலை ஆவேசம்

Published

on

நீட் தேர்வுக்கு முன்னால் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் என்பதையும் திமுக தலைவர்கள், அமைச்சர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை ஏழை மாணவர்களை அனுமதித்தார்கள் என்றும் தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அண்ணாமலை அவர்கள் சேலம் சென்றார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்து உள்ளது. இது நீட் தேர்வை வைத்து வியாபாரம் செய்வதற்கு எதிராக வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணி கொண்டுவந்தாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த தேர்வு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இப்போது அவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வை அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெறும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதால் தமிழக மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் நீட்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது குறித்து திமுக வெள்ளை அறிக்கை விடுமா? அந்த பத்து வருடங்களில் மொத்தம் 190 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர்ந்துள்ளனர்.

மேலும் திமுக தலைவர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை ஏழை மாணவர்களை அனுமதிக்கிறார்கள் என்பது குறித்து தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுகவினர் செய்யும் அரசியல் தான் மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. யாரெல்லாம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்களோ அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது தனுஷ் மரணத்திற்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல் அரசியல்வாதிகளின் உதவி இல்லாமல் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டுமானால் அது நீட் தேர்வால் மட்டுமே முடியும். எனவே திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வை நிறுத்த முடியாது. இது நன்றாக தெரிந்தும் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது’ என்று அண்ணாமலை தெரிவித்தார்

Trending

Exit mobile version