தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது எப்போது? இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று முதல் மருத்துவ கல்லூரி தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக மற்ற கல்லூரிகளும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற உள்ள முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார்.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கம் மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்க அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டு நிலையில் அதுகுறித்த முடிவு மற்றும் பள்ளிகள் திறப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் அமைப்பது குறித்தும் இந்த ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version