தமிழ்நாடு

நள்ளிரவில் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற டிடிவி தினகரன்: தமிழக அரசியலில் பரபரப்பு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது.

இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள். மேலும் மறைந்த விஜயலட்சுமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சசிகலா, ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் செய்து, சசிகலாவை முதல்வராக விடாமல் செய்தது ஓபிஎஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு பின்னர் சசிகலா – ஓபிஎஸ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தமிழக அரசியல் வட்டாரத் கருதப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மறைந்த விஜயலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தேனியில் நள்ளிரவில் டிடிவி தினகரன் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் மகன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ஓபிஎஸ் கைகளை பற்றிக்கொண்டு தினகரன் ஆறுதல் கூறிய புகைப்படம் வைரலாகி வருகிறது. சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்துகொண்டிருந்த ஓபிஎஸ் அவர்களை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் நேரில் வந்து ஆறுதல் கூறியது அரசியல் நாகரீகமாக இருந்தாலும், இதன் காரணமாக தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version