இந்தியா

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: காஷ்மீர் பிரச்சனைக்கு ஜவகர்லால் நேருதான் காரணம்!

Published

on

ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார்.

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பாக பேசிய அமித்ஷா, தற்போதைய நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாது. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் ஜம்மூ காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றார். இதனையடுத்து மக்களவையில் ஜம்மூ காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதாவை அமித்ஷா அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது, இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு கொல்லம் கே.பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை பெற அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, ஜம்மூ காஷ்மீரில் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தது காங்கிரஸ்தான். பாஜக அரசின் கீழ் ஜம்மூ காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். மக்களின் ஆதரவில்லாமல் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து பேசிய அமித் ஷா, மக்களின் உதவியுடன் நிச்சயமாக பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவோம். ஜம்மூ காஷ்மீரில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக கூறுகின்றனர். இதற்கு முன் அங்கு 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 93 முறை காங்கிரஸால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நமக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார்களா?

ஜம்மூ காஷ்மீரில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்தது ஜவகர்லால் நேருதான். நாங்கள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நேருவோ அப்போதைய உள்துறை அமைச்சருக்கு நம்பிக்கையளிக்காமலே காஷ்மீரில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டார். ஆகையால் மணிஷ் ஜி எங்களுக்கு வரலாறு பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்றார் ஆவேசமாக. இதனையடுத்து ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்தது.

seithichurul

Trending

Exit mobile version