உலகம்
டெல்டா, ஆல்பா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படும் கோவாக்சின்: அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பலவிதங்களில் உருமாறி வருகிறது என்றும் உருமாறி வரும் ஒவ்வொரு கொரோனா வைரஸ்களும் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி டெல்டா மற்றும் ஆல்பா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என அமெரிக்க சுகாதார நிறுவனம் ஆய்வு முடிவில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அதில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கின்றது என்றும், அதேபோல் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவேக்சின் சார்ஸ்-கோவ்-2 வின் முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளதால் இதை நகல் எடுக்க முடியாது என்றும், ஆனால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுவதாகவும் என கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி, கொரோனா நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனையும் கொண்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.