தமிழ்நாடு

ஹால்மார்க் எண் கட்டாயத்தை கண்டித்து நகைக்கடைகள் இன்று மூடல்!

Published

on

ஹால்மார்க் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து இன்று நாடு முழுவதும் நகை கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தங்க நகைகளின் தரத்தை குறிப்பிடும் வகையில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த முத்திரையை நம்பி தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 256 மாவட்டங்களில் தங்க நகையில் ஹால்மார்க் முத்திரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

நகைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளுக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை நகர நகைக்க்டை சங்க தலைவர் இதுகுறித்து கூறிய போது ’பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஹால்மார்க் முத்திரையை பயன்படுத்தி வருவதாகவும் இந்த முத்திரை அனைத்து நகரங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் என்பதால் ஹால்மார்க் முத்திரையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தனி ஹால்மார்க் அடையாள எண் கொண்டு வர வேண்டும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு எடுத்த முடிவை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை இரண்டரை மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் சென்னையில் உள்ள 7000 நகைக்கடைகள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நகைகடைகளும் இந்த இரண்டரை மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என்றும் நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version