கிரிக்கெட்

‘கோலி இல்லைன்னா நான்தான் டீம் கேப்டனா..?’- ரஹானே ஓப்பன் டாக்

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளார். தனக்கும் தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் குழந்தை பிறக்கவுள்ளதால், அவருடன் இருக்க விராட், தாயகம் திரும்புகிறார். கோலி இல்லாமல் யார் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருக்கும் ரோகித் சர்மா, இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் விளையாட தகுதி படைத்தவராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே, அவருக்கு கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியே ரஹானேவுக்கு கேப்டன்ஸி வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து ரஹானே பேசுகையில், ‘என்னைப் பொறுத்தவரை, நான் நிகழ்காலத்தில்… இந்த சமயத்தில் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்பேன். அதில்தான் எனது கவனம் இருக்கும். எதிர்காலத்தில் அல்லது இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, விராட் கோலிதான் எங்கள் கேப்டன். எனவே அந்தப் போட்டியில் எப்படி விளையாடுவது, விராட் கோலிக்கு எப்படி உதவிகரமாக இருப்பது என்பதில்தான் எனது எண்ணம் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதும் கடினமான ஒன்றுதான். ஆஸ்திரேலிய அணி வலுவாக இருப்பதாகவே எண்ணுகிறேன். அவர்களுக்கு உண்டான மரியாதையை நீங்கள் கொடுத்துதான் ஆக வேண்டும். அதே நேரத்தில், இந்திய அணிக்கென்று பல பலங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்தி விளையாடுவதில்தான் இந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்’ என்றுள்ளார்.

 

 

Trending

Exit mobile version