கிரிக்கெட்

மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி… “அப்போ என் நிலைமை என்ன?”- ரஹானே ஓப்பன் டாக்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, படுதோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அஜிங்கியே ரஹானே, கேப்டன் பொறுப்பை ஏற்று அணியைத் திறம்பட வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார். ஆஸ்திரேலிய தொடரை அடுத்து, பல தரப்பினர், ‘கோலியைவிட ரஹானே தான் நல்ல கேப்டனாக தெரிகிறார். எனவே அவர் தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும்’ என்கிற குரல்கள் எழுந்தன. இதற்கு ரஹானே, தன் பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“மீண்டும் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தான் அணியின் கேப்டனாக இருப்பார். அதில் எந்த மாற்றமும் இருக்காது. நான் அணியின் துணை கேப்டனாகத் தான் இருப்பேன். அவர் இல்லாத போது அணியைத் திறமையாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதை நான் முழு முயற்சியுடன் செய்வேன்.

ஒரு அணியின் கேப்டனாக இருப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. கேப்டனாக நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பது தான் முக்கியம். இதுவரை ஒரு கேப்டனாக நான் வெற்றி பெற்றுள்ளேன். இனிமேலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.” என்று மிக வெளிப்படையாக பேசியுள்ளார் ரஹானே. இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் சென்னையில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஹானே மேலும் கூறுகையில், ‘எனக்கும் விராட் கோலிக்கும் எப்போதும் நல்ல நட்புறவு இருந்துள்ளது. அவர் என் பேட்டிங்கை பலமுறை வெளிப்படையாக பாராட்டியுள்ளார். நானும் அவரது பேட்டிங்கை பலமுறை களத்தில் இருந்து பார்த்து வியந்துள்ளேன். அதே நேரத்தில் இருவரில் யாராவது ஒருவர் தவறாக விளையாடினால், இன்னொருவர் அதைத் திருத்திக் கொள்ளச் சொல்வோம்.

விராட் கோலி ஒரு ஷார்ப்பான கேப்டன். களத்தில் மிகச் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. அதே போல தனிப்பட்ட முறையில் அவர் என்னிடமும் நிறைய எதிர்பார்ப்பார். அவர் எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியது எனது கடமை தான்’ என்று தகவல்களைத் தந்துள்ளார். இந்திய அணிக்கு வெளியே கோலி – ரஹானே மோதல் வரும் என்று பேசப்பட்டாலும், அவர்கள் இருவருக்கு இடையில் நல்ல நட்புறவு இருப்பதாகவே தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version