சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படம் எப்படி?

Published

on

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

ஆதிரா என்னும் போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷ் பேருந்தில் பயணம் செய்யும்போது ஒரு இளைஞனை சந்திக்கிறார். அந்த இளைஞர் மீது அவர் காதல் கொள்ள இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி அனன்யா கொல்லப்படுகிறார். அந்த வழக்கு அவரிடம் வரும்போது அந்த வழக்கை விசாரணை செய்ய களம் இறங்கினார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் மற்றும் அனன்யாவின் கொலை ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு எதிர்பாராத திருப்பத்தை கிளைமாக்ஸில் கொடுக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

இளைஞனிடம் மனதைப் பறிகொடுக்கும் காதலியாகவும், கொலை வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் இரண்டு வித்தியாசமான பரிணாமங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவர் தனது கேரக்டரை மிகவும் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதற்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.

நகரில் இளம் பெண்கள் நள்ளிரவில் கதவைத் திறந்துவிட்டு டிவி பார்க்கும் காட்சிகள் மற்றும் யார் வீட்டுக்குள்ளும் யார் வேண்டுமானாலும் எளிதில் நுழைந்து கொலை செய்யலாம் போன்ற காட்சிகள் நம்பத்தகுந்த வகையில் இல்லை. அதேபோல் பல லாஜிக் குறைகளும் இந்த படத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருப்பதால் படம் பார்க்கும் வகையில் உள்ளது. படம் முழுவதும் ஒரு சிலவற்றை பார்வையாளர்களை யூகிக்க வைத்து ஆனால் அந்த யூகிப்பின்படி இல்லாமல் காட்சிகள் அமைந்திருப்பது இயக்குனரின் பாராட்டத்தக்க திரைக்கதையாக உள்ளது.

குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் இந்த படத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version