தமிழ்நாடு

எடப்பாடிக்கு வந்த சோதனை: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர்!

Published

on

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதே போல தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் ஒருவரும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார்.

#image_title

முன்னதாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் 35-வது பத்தியில் பொதுக்குழு தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான சிவில் வழக்கை தாக்கல் செய்து தொடர்ந்து நடத்த உள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுக்குழுவில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அதிமுக சட்ட விதிகளில் எந்தவித திருத்தமும் செய்யக்கூடாது. அவ்வாறு திருத்தம் செய்தால் அது நீதிக்கு எதிரானதும், என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இது எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும். எனவே ஜூலை 11-ந் நடந்த பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

#image_title

இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு ஒன்றை அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் வழங்கி உள்ளார். அதில், அதிமுக கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளகூடாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு உள்ளது. இந்த திருத்த விதிகள் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் உள்ளது.

மேலும் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் அதிமுக அடிப்படை உறுப்பினர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கோரிக்கை மனு ஈபிஎஸ் தரப்புக்கு சவாலாக அமைய வாய்ப்புகள் உள்ளது. இதேப்போன்று மேலும் பல அடிப்படை உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு எதிராக மனுக்கள் அனுப்ப தொடங்கினால் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தால் கவனிக்கப்பட்டு ஈபிஎஸுக்கு எதிராக திரும்பவும் வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version