தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா: கரும்புக்கு ஊக்கத்தொகை!

Published

on

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேளாண் பட்ஜெட் (Agri Budget)

2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை நிதியமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • பனை சாகுபடியை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிக்குளத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குளிர்கால காய்கறிகளின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு, பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்கள் விவசாயத்தைப் பற்றி அறிந்து கொள்ள, பண்ணைச் சுற்றுலாவிற்கே ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் விவசாயத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, கல்வித் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவில் இருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆடு, மாடு மற்றும் தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கே ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லாத கடன் அளிக்கப்படும்.
  • சிறப்பு ஊக்கத் தொகையாக கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்.
seithichurul

Trending

Exit mobile version