உலகம்

10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த அமேசானின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு!

Published

on

சமீபத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அமேசான் நிறுவனம் அடுத்ததாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் புதிதாக வேலைக்கு சேர இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை, பண வீக்கம் ஆகியவை காரணமாக முன்னணி நிறுவனங்கள் செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களை வேலை நீக்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தின் செலவை குறைப்பதற்காக சமீபத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதாக செய்திகள் வெளியானது. இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பாக புதிதாக நிறுவனத்தில் சேர இருக்கும் கல்லூரி பட்டதாரிகளை தாமதப்படுத்துவது என முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய பணியாளர்கள் மே மாதம் பணியில் சேர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிவரை புதிய பட்டதாரிகள் காத்திருக்க வேண்டும் என்று இ-மெயில் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வேலையில் சேரும் தாமதம் காரணமாக ஊழியர்களுக்கு 13 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கலிபோர்னியாவில் உள்ள அமேசான் வளாகத்தில் வரும் மே முதல் பணி புரியலாம் என்ற மிகுந்த ஆவலுடன் காத்திருந்த ஏராளமான ஊழியர்கள் இந்த அறிவிப்பு காரணமாக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்தபோது, ‘எங்களுடைய வருட செயல்பாட்டு திட்டமிடல், மதிப்பாய்வின் ஒரு பகுதியாக நாங்கள் வணிகத்தின் ஒவ்வொரு பகுதியையும் தேவைக்கேற்ற மாற்றங்களை செய்து வருகிறோம். இது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல, வணிக முடிவு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சவாலான பொருளாதார நிலைமை காரணமாக கல்லூரிகளிலிருந்து பணியமர்த்தப்பட்ட புதிய பணியாளர்களின் தேதியை ஆறு மாதங்கள் வரை தாமதப்படுத்தி உள்ளோம். ஆனால் அதே நேரத்தில் பணியில் சேர காத்திருக்கும் ஊழியர்களுக்கு நிதி பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள் உதவி வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version