இந்தியா

அதானி குழுமப் பங்குகள் சரிவால் ரூ.18,647 கோடி நஷ்டமான எல்.ஐ.சி.. பாலிசிதாரர்கள் அதிர்ச்சி!

Published

on

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி பங்குகளும் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது.

மார்க்கெட் கேபிடலைசேஷன் மூலம் அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி. மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருந்தது. அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசியின் முதலீடு 2023ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ரூ. 81,268 கோடி என இருந்த நிலையில் அது ஜனவரி 27 அன்று ரூ.62,621 கோடி எனசரிந்தது. அதாவது எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ரூ.18,647 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி.யின் பணம் பாலிசிதாரர்களின் பணம் என்பதால் இந்த நஷ்டம் உண்மையில் பாலிசிதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் இதுகுறித்து கூறியபோது, ‘அதானி குழும நிறுவனங்கள் மீதான ஆய்வு அறிக்கையால் இந்திய சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டது. இது வங்கிப் பங்குகளை, குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் பங்குகளை பெரிய அளவில் பாதித்துள்ளது’ என்றார்.

ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட்டின் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா கூறுகையில், அதானி குழுமப் பங்குகளில் ஏற்பட்ட அழிவு, வங்கித் துறை அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொண்டது என்றார்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி, அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் சரிந்ததால் அதானிக்கு மட்டுமின்றி பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெரும்பாலோனர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 20 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் 19.99 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 19.99 சதவீதம், அதானி எண்டர்பிரைசஸ் 18.52 சதவீதம் சரிந்தது. மேலும், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் 16.03 சதவீதமும், அதானி வில்மர் 5 சதவீதமும், அதானி பவர் 5 சதவீதமும் சரிந்தன.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,04,580.93 கோடி சரிந்தது, அதானி டிரான்ஸ்மிஷனின் மதிப்பு ரூ.83,265.95 கோடி சரிந்தது. அதானி எண்டர்பிரைசஸ் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.77,588.47 கோடியும், அதானி கிரீன் எனர்ஜி ரூ.67,962.91 கோடியும், அதானி போர்ட்ஸ் (ரூ.35,048.25 கோடி)யும் சரிந்தன.

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.23,311.47 கோடியும், அதானி பவர் ரூ.10,317.31 கோடியும், ஏசிசி ரூ.8,490.8 கோடியும், அதானி வில்மர் ரூ.7,258.7 கோடியும் குறைந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version