இந்தியா

25 ஆண்டுகள் கழித்து ரீமேக் ஆன டைரிமில்க் விளம்பரம்: வீடியோ வைரல்

Published

on

ஒரு சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துவரும் நிகழ்வுகளாக திரையுலகில் இருந்து வருகிறது. ஆனால் ஒரு விளம்பரப்படம் 25 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

காட்பரீஸ் டைரிமில்க் என்ற நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் செஞ்சுரி அடிப்பதற்கு ஒரு ரன் மட்டும் தேவை என்ற நிலையில் ஒரு பந்தை ஓங்கி அடிப்பார். அந்த பந்து பவுண்டரி லைனில் பக்கத்தில் உள்ளவர் கேட்ச் பிடிக்கும் அளவுக்கு சென்று அதன் பின் அவர் எல்லைக் கோட்டை தாண்டி விடுவார்.

இதனை அடுத்து கேலரியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஏமாற்றிவிட்டு மைதானத்துக்குள் வந்து டான்ஸ் ஆடி காட்பரீஸ் டைரிமில்க் சாக்லேட்டை சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி அந்த விளம்பரத்தில் இருக்கும்.

இந்த விளம்பரம் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. புதிய விளம்பரத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் வெற்றிக்கான ஷாட்டை அடிக்கிறார். அப்போது வீரர் ஒருவர் மைதானத்திலிருந்து ஓடி வந்து டான்ஸ் ஆடி காட்பரீஸ் சாக்லெட் சாப்பிடுவது போன்று இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து வருவதை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த விளம்பரம் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக கேட்பரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உண்மையில் இந்த விளம்பரம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் உருவானது. இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையே நடந்த ஒரு போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சதம் அடித்த போது இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்து அந்த வீரருக்கு முத்தம் கொடுத்தார். இந்த நிகழ்வை மையமாக வைத்துதான் காட்பரீஸ் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விளம்பரத்தை தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரம் தான் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version