தமிழ்நாடு

வேலூர் தேர்தலில் அதிமுக 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்: கிச்சு கிச்சு மூட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Published

on

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்தார்.

ஆனால் இந்த தேர்தல் இன்னும் இரண்டு மாதம் கழித்து நடந்திருந்தால் அதிமுக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் தேர்தல் முடிவு குறித்து பேசினார்.

அப்போது, திமுக வாக்கு வங்கி குறைந்திருக்கிறது. அதிமுக வாக்கு வாங்கி கூடியிருக்கிறது. ஒரு பூத்திற்கு 4 ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வெற்றிகரமாக தோல்வி அடைந்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் திமுகவிற்கு ஓட்டு விழவில்லை. இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்ததன் விளைவாகத்தான் திமுக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக பெற்றது வெற்றியும் இல்லை நாங்கள் பெற்றது தோல்வியும் இல்லை. இன்னும் இரண்டு மாதம் கழித்து வேலூர் தேர்தல் வந்திருந்தால் அதிமுக 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். வேலூர் நாடாளுமன்ற தேர்தல் எங்களுக்கு ஒரு பாடம். அடுத்த நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஒரு தேர்தல் முடிவை வைத்து ஒரு கட்சியின் வரலாறை நிர்ணயித்துவிட முடியாது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version