தமிழ்நாடு

கசிந்தது அதிமுக ரகசியம்: உட்கட்சி குழப்பத்தால் பறிபோன அமைச்சரவை இடம்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய சிறப்பு அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் நேற்று பதவியேற்றனர். ஆனால் இதில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. இந்நிலையில் அதிமுகவின் உட்கட்சி குழப்பத்தால் தான் அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனதாக ரகசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

பாஜக அதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்க முடிவு செய்து அதனை மக்களவை தேர்தலில் வென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு வழங்க முடிவு செய்து அதிமுகவிடம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவில் இதற்கு ஓபிஎஸ் தரப்பின் எதிர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் போது ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என்ற எதிர்ப்பு பலமாக எதிர் தரப்பில் இருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என அவரது தரப்பு கோதாவில் இறங்கியது. இதனால் அதிமுகவில் பெரும் களோபரமே நடந்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க கூடாது என ஒரு கூட்டமே வலியுறுத்துவதாக தகவல்கள் வருகின்றன.

இதனையடுத்து அதிமுகவுக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அதிமுக தரப்பு பாஜக தலைவர்களை வலியுறுத்தியதாக பேசப்படுகிறது. அதிமுகவின் இந்த உட்கட்சி குழப்பத்தால் பாஜக தரப்பு அதிமுகவை ஒட்டுமொத்தமாக நேற்று புறக்கணித்ததாகவும், அதிமுக குழப்பங்கள் முடிவுக்கு வந்தபின்னர் பாஜக அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version