தமிழ்நாடு

கோவையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி; கொந்தளித்த மாவட்ட அதிமுக – கலக்கத்தில் ஈபிஎஸ்

Published

on

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அஇஅதிமுக, தான் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தான பட்டியலையும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ள பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதில் கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக பலமாக உள்ள இடம். இந்த தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.

edappadi palanisamy

கோவை தெற்கு தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரான அம்மன் அர்ஜூனன் உள்ளார்.

இந்த முறையும் அவர் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் தெற்கு தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் ஏராளமானோர் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கோவை தெற்கு தொகுதியை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால், நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் கூறி அவர்கள் அதிமுக அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு உள்ளேயே உள்ளடி வேலைகள் நடக்கும் எனத் தெரிகிறது. இந்த திடீர் கொந்தளிப்பார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கலக்கத்தில் உள்ளது.

Trending

Exit mobile version