தமிழ்நாடு

தினகரனை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தை நாடிய அதிமுக!

Published

on

அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தினகரன் அதிமுகவையும், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு உள்ளது அவரது தற்போதையை பிரச்சாரம். அந்த அளவுக்கு காட்டமாக உள்ளது.

இந்நிலையில் உண்மைக்கு மாறாக அவதூறு தகவல்களை தினகரன் பரப்புவதாகவும், அவரது பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக நேற்று மனு அளித்துள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் இந்த புகாரை அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும், எட்டுவழிச் சாலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தினகரன் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

நேற்று முன்தினம் சூலூரில் பிரச்சாரத்தின்போது மருத்துவ அவசர ஊர்திக்கு வழிவிடாமல் பிரச்சாரம் செய்துள்ளார். எனவே பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும். முன்பு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளோம். மேலும் பொய்யான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் தினகரன் தொடர்ந்து விதிமீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version