தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் போல வேடம் போட்டு வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர்!

Published

on

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தனது சொந்த தொகுதியான இராயபுரத்திலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். 

முன்னதாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தன் தொகுதியில் வந்து போட்டியிடுமாறு பகிரங்க சவால் விட்டார். இராயபுரம் தொகுதியிலிருந்து பல முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஜெயக்குமார் வெற்றி பெறுவோம் என்று அதிக நம்பிக்கையில் இருக்கிறார். 

குறிப்பாக தன் தொகுதி மக்களைக் கவர்வதற்கு அவர் அதிமுக நிறுவனரும், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவருமான எம்.ஜி.ஆர் போல வேடப் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதே நேரத்தில் அவரை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக இந்த முறை பாஜகவோடு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. பாஜக தனது மேடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர் படத்தை பகிரங்கமாக பயன்படுத்தி வருகிறது. இது அதிமுக தொண்டர்கள் இடையேயும் நிர்வாகிகள் இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதிமுக தலைமை இது பற்றி எவ்வித கருத்தும் கூறாமல் இருக்கிறது. 

எதிர் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி தான் பெருவாரியான தொகுதியைக் கைப்பற்றும் என்றும், திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இதனால் அதிமுக தரப்பில் தீவிரப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. 

Trending

Exit mobile version