தமிழ்நாடு

‘கருங்காலி தேசியக் கட்சி..!’- எடப்பாடி, ஓபிஎஸ் முன்னிலையில் பாஜகவை கிழித்த கே.பி.முனுசாமி

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப் பொதுக் கூட்டத்தை, இன்று சென்னையில் நடத்தியது ஆளும் அதிமுக. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பாஜகவை வெளிப்படையாக வெளுத்து வாங்கினார் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முனுசாமி, ‘சாகும் வரை முதல்வராக இருந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். அண்ணா வழியிலேயே, பெரியார் வழியிலே மாபெரும் இயக்கமான அதிமுகவை அவர் கட்டமைத்தார். அவரைத் தொடர்ந்து இந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய ஜெயலலிதா, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை மாற்றினார். தற்போது அது ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியால் தமிழகம், அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளது.

ஆனால், இப்போது சில கருங்காலிகள் சொல்கிறார்கள், திராவிட இயக்கங்கள் ஆட்சியினால் தமிழகத்தின் வளர்ச்சி பின்தங்கிவிட்டது என்று. சில தேசியக் கட்சிகளும், சந்தர்பவாதிகளும் இப்படி பேசுகிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் தேர்தலில் செயல்பட்டு வெற்றி ஈட்ட வேண்டும்’ என்று பாஜகவை சூசகமாக விமர்சித்தார் முனுசாமி. கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையில் கருத்து மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அதிமுக தரப்பில், வரப்போகும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதை பாஜக அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையில் வாதப் போர் நடந்து வருகிறது.

 

Trending

Exit mobile version