தமிழ்நாடு

திமுகவுடன் நேரடி போட்டி இல்லை: அதிமுகவின் புதிய ரூட்!

Published

on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக உள்ள அதிமுகவும், திமுகவும் இந்தமுறை தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை இழந்த பின்னர் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது. அதே போல அதிமுகவும் ஜெயலலிதாவை இழந்த பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல். இதனால் இவ்விரு கட்சிகளும் தங்கள் வியூகங்களை எப்படி அமைக்க உள்ளனர் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பொதுவான பார்வையில் திமுக கூட்டணியே பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அசுர பலத்தில் இருக்கும் திமுகவை அதிமுக எப்படி சமாளிக்கப்போகிறது என்ற திட்டம் ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது. அதாவது திமுகவை நேரடியாக இந்தமுறை அரசியல் களத்தில் சந்திக்க விரும்பவில்லை அதிமுக.

அதாவது பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிக்கெல்லாம் சேர்ந்து குத்துமதிப்பாக இருபது தொகுதி போக மீதி இருபது தொகுதியில் அதிமுக போட்டியிடும். அதே போல திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்பட 6 கட்சிகள் உள்ளது. அங்கேயும் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக மீதியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்.

எனவே திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடக்கூடிய பெரும்பாலான தொகுதிகளில் மட்டும் அதிமுக நேரிடையாக போட்டியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் செலவு செய்யாது, இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகிறது. உதயசூரியன் போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடாது என்பதே அதிமுகவின் தேர்தல் வியூகமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version