சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்: என்ன காரணம்?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாசர், கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சற்றுமுன் சந்தித்துள்ளனர் .
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாண்டவர் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொருளாளராக கார்த்தி, செயலாளராக விஷால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சற்று முன் நாசர், கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவது மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றுவது உள்ளிட்ட ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.