விமர்சனம்

காதுல பூவை சுத்தலாம்… ஆனா, இவ்ளோ பெரிய கரடி பொம்மையை சுத்தலாமா..? டெடி விமர்சனம்!

Published

on

டெடி… ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவி ஸ்ரீவித்யா (சாயிஷா) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று அவர கடத்துகிறது ஒரு கும்பல். கோமா நிலையில் இருக்கும் சாயிஷாவின் ஆவி (ஆன்மா) அவரது உடலில் இருந்து வெளியில் வந்து ஒரு டெடி பேரில் புகுந்துவிடுகிறது. என்னப்பா ஹீரோ எங்கேனு கேக்குறீங்களா..? உலகத்துல இருக்குறதுலயே புத்திசாலி நம்ம ஹீரோ. ஆவி புகுந்த அந்த டெடி புத்திசாலி ஆர்யாவுடன் சேர்ந்து தன்னை ஏன் கோமாவுக்கு கொண்டு சென்றார்கள்… ஏன் கடத்தினார்கள் என்பதைக் கண்டுபிடித்து ஹீரோ ஆர்யாவுடன் கரம் கோர்த்தது என்பதைச் சொல்லும் படம் தான் டெடி…

ஆங்கிலத்தில் கரடி பொம்மையை வைத்து வெளியான டெட் என்ற படத்தைப் போலவே தமிழில் ஒரு படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன்.

ஓசிடி பாதிக்கப்பட்டவராக ஆர்யா கொஞ்சம் இருக்கமாக… தனியாக சுத்தும் நபராக அதீத புத்திசாலியாக வந்து போகிறார். அவர் நல்லா நடிச்சுருக்காரா இல்லை நடக்கவே வராத அவரது முகத்துக்கு இந்தக் கேரக்டர் ஒத்துப் போயிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார் ஆர்யா. அதாவது ரியாக்சனே வராத அவரது மூஞ்சிக்கு ரியாக்சன் காட்ட தேவையில்லாத ஒரு பாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்ரீவித்யாவாக சாயிஷா… மொத்தமே இரண்டே இரண்டு காட்சிதான். அதுக்குமேல அவருக்கு இந்தப் படத்தில் எந்த வேலையும் இல்லை. அந்த வேலையையும் அவர் நல்லா செய்யவில்லை என்பது தான் சோகம். டெடியாக நடித்தவர் அந்த டெடியின் அசைவுகளை ஓரளவு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். வழக்கம் போல தேவையே இல்லாமல் இந்தப் படத்திலும் இடம் பிடித்திருக்கிறார் சதீஷ் மற்றும் கருணாகரன். இவங்களாம் எதுக்கு இன்னும் சினிமாவுல நடிச்சுட்டு இருக்காங்கனே தெரியலை. நடிக்கவும் வரலை காமெடின்னு பேருல கடிக்கவும் வரலை. காமெடி செஞ்சா சோகமா உக்காந்திருக்கது இவங்களைப் பார்த்துதான். ஐயா நீங்க எப்போ மாறுவீங்க.

மருத்துத்துறையில் நடக்கும் ஒரு பிரச்னையை மையமிட்டு தமிழ் சினிமாவில் வரும் 15 லட்சமாவது படமாக இது இருக்கும்னு நினைக்கிறேன். நாய்கள் ஜாக்கிரதை படத்தில் கொஞ்சமேனு கவனம் ஈர்த்த இயக்குநர் இதில் சுத்தம்… அடேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்கன்னு சொல்லும் அளவுக்குதான் நத்தை வேக திரைக்கதை. டெடி-யின் பேச்சு. அந்தக் கதாபாத்திரம் செய்யும் வேலைகள், அதுக்கும் ஆர்யாவுக்குமான கெமெஸ்ட்ரி, காமெடி என எதுவுமே ஒத்துப்போகவில்லை. பேரு மட்டும் சங்கீதான்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. ஒரு துளி அளவு கூடவா லாஜிக் இருக்க கூடாது. என்ன சொன்னாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். அதுவும் ஓடிடி வேறு. கேட்கவா வேண்டும். நோக்கத்துக்கு கதை சொல்றாங்க. ஆனா, அதை கேட்கத்தான் முடியலை. அதர பழசான கதை, அழுத்தமே இல்லாத திரைக்கதை, நம்ப முடியாத காட்சிகள், என நம்மை ரொம்பவே சோதிக்கிறது இந்த டெடி. அப்போ வில்லன். அலோ… அழுத்தமே இல்லாத திரைக்கதைக்கு தேவையே இல்லாத ஆணி தான் அந்த வில்லன். அத ஏன் பேசனும்னு விட்டேன். ஆனா விட மாட்டீங்க போல. உண்மையில் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கும் படம் பாக்கணும்னு ஆசைப்பட்டா மைடியர் குட்டிச்சாத்தான், பட்டணத்தில் பூதம் போன்ற படங்களை மீண்டும் ஒருமுறை போட்டுப் பாத்துட்டு குப்புறப் படுத்துடுங்க…

ஒரே ஆறுதல் இமானின் இசையில் என் இனிய தனிமையே, நண்பி பாடல்கள்தான். பின்னணி இசையில் எல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லைன்ற ரகம் தான். படம்ன்ற பேருல காது பூவை சுத்துற இயக்குநர்கள பாத்திருப்போம்… ஆனா சக்தி சவுந்தர் ராஜன் ஒரு பெரிய கரடி பொம்மையையே சுத்திருக்காரு… பாத்து உசாரு….

seithichurul

Trending

Exit mobile version