இந்தியா

ஆதார், பி.எஃப், ஜிஎஸ்டி, ஆகியவைகளுக்கு புதிய விதிகள்: இன்று முதல் அமல்!

Published

on

ஆதார் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டி உள்பட ஒரு சிலவற்றில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் சில மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது. அவை என்னென்ன மாறுதல்கள் என்பதை பார்ப்போம்.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. முன்னதாக ஜூன் 30 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் வாய்ப்புகள் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை பான் கார்டு, ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல் ஜிஎஸ்டி என்று சொல்லக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் சமீபத்தில் விதி எண் 59 (6) என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஜிஎஸ்டிஆர்-1 பதிவு செய்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதியின்படி ஜிஎஸ்டி அப்ளை செய்யும் ஒருவர் சரக்கு குறித்தோ அல்லது அவர் வழங்கும் சேவை குறித்தோ படிவத்தில் தெரிவிக்க முடியாது.

அதேபோல் இன்று முதல் பி.எஃப் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றம் குறித்து தற்போது பார்ப்போம். பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் சந்தாதாரர்கள் தங்களுடைய சலுகைகளை பெற முடியாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பிஎஃப் – ஆதார் எண்ணை உடனடியாக இணைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள புதிய காசோலை பரிவர்த்தனை புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கி பாசிடிவ் பே சிஸ்டம் என்பதை அமல்படுத்தி உள்ளது. இதன்படி ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை காசோலை மூலமாக பரிசோதனை செய்யும்போது காசோலை வழங்கியவர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவலை உறுதி செய்ய வேண்டும். பயனாளியின் பெயர், பணம் செலுத்துபவர்கள் பெயர், செலுத்தப்படும் தொகையின் மதிப்பு, காசோலை எண், தேதி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் பாசிட்டிவ் பே சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட காசோலைகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அங்கீகாரம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இன்று முதல் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இன்று முதல் டெபாசிட் டெபாசிட் மீதான வட்டி 2.9 சதவீதம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.

மேலும் கார்களுக்கு பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அந்த விதியும் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பாரத் சீரிஸ் என்ற புதிய நம்பர் பிளேட் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு பாரத் சீரிஸ் எண் பெற்றுவிட்டால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது பதிவு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version