சினிமா செய்திகள்

தமிழில் ஓர் உலக சினிமா – டுலெட் விமர்சனம்!

Published

on

உலக தரத்தில் சினிமா எடுக்க வேண்டும் என்றால், அவதார் அளவுக்கோ அவெஞ்சர்ஸ் அளவுக்கோ பட்ஜெட் தேவையில்லை. லைஃப் இஸ் பியூட்டிபுல், ரோமா போன்ற படங்களை போல குறைந்த பட்ஜெட்டிலும் படம் எடுக்கலாம்.

உலக சினிமா என்பது பிரம்மாண்டங்களின் அணிவகுப்பு மட்டும் அல்ல, அது யதார்த்தத்தின் ஆணி வேர். படத்தை பார்த்த பல்வேறு நாட்டு மக்கள் படத்தை பாராட்டியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளில் கலந்து கொண்ட டுலெட் படம் 36க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

கடந்த ஆண்டே இந்திய அரசின் தேசிய விருதையும், வாங்கி சாதனை படைத்த டுலெட் சினிமா திரையரங்குகளில் மக்களின் விருதினை வாங்க ரிலீஸ் ஆகியுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளரான செழியன், எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள டுலெட் படம். உலக அரங்கில் தமிழ் சினிமாவை மீண்டும் ஒரு முறை கம்பீரமாக தலை நிமிர வைத்துள்ளது.

காக்கா முட்டையை போல இந்த படத்தின் கதையும் சிம்பிள் தான். சென்னையில் வீடு தேடி அலையும் ஒரு குடும்பம், அதனால், அவர்களுக்கு ஏற்படும் கஷ்டம். இங்கு வில்லன்கள் என்று தனியாக யாரும் இல்லை. ஆனால், சூழலும் மனிதர்களின் மனமுமே வில்லன்களாக தெரிகிறது.

வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படும் அந்த நடுநாயக கதாபாத்திரங்களும், சொந்த வீடு வைத்திருந்தால், அவர்களிடம் வீடு தேடி வருவோருக்கு அவர்கள் வில்லன்களாகத்தான் இருப்பார்கள்.

படத்தின் கதை:

ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய இந்த டுலெட் படத்தின் கதை 2007ம் ஆண்டு ஐடி துறையின் வளர்ச்சியால் சென்னையில் வாடகை வீட்டுக்கான குடைக்கூலி அதிரடியாக உயர்ந்து சாதாரண மக்கள் துயரப்பட்ட காலக் கட்டத்தில் எடுக்கப்பட்டது.

தினக்கூலி வாங்குபவனை விட தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிபவனின் நிலை எவ்வளவு ஏழ்மையானது என்றும் கொடுமையானது என்பதையும் இளங்கோ கதாபாத்திரம் விளக்குகிறது. குடும்ப தலைவியாகவும், அம்மாவாகவும், மனைவியாகவும் அமுதா கதாபாத்திரம் நேர்த்தியாக உள்ளது. குறும்பு செய்யும் சிறுவன், சுவற்றில் கிறுக்கி விளையாடும் குழந்தை, பாவம் அவனுக்கு வாடகை வீட்டில் கிறுக்க கூடாது என்ற சட்டம் எல்லாம் எப்படி தெரியும், அந்த குழந்தை சித்தார்த்தின் கதாபாத்திரம் தான் படத்தை பார்ப்பவர்களை ரசிக்க தூண்டும் தூணாக விளங்குகிறது.

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் இளங்கோ ஒரு சிறிய வீட்டில் குடி இருக்கின்றனர். அந்த வீட்டு உரிமையாளர் வீட்டை 4ம் தேதிக்குள் காலி செய்யுங்க என சொல்கிறார். வேறு வீடு தேடி அலையும் போது அந்த குடும்பத்துக்கு சமூகத்தால் எப்படி பட்ட பிரச்னைகள் வருகிறது என்பதை இயக்குநர் செழியன் இம்மி அளவும் யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கும் கதை தான் டுலெட்.

சொந்த வீட்டில் இருப்பவர்கள், அப்பாடா நமக்கு இந்த பிரச்னை இல்லை என்றாலும், அவர்களுக்கு சமூகத்தால் ஏற்படும் சில பிரச்னைகளையும் படத்தில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இயக்குநர் சொல்லி இருக்கிறார்.

இளங்கோவாக நடித்துள்ள சந்தோஷ் ஸ்ரீராம், ஒரு உதவி இயக்குநரின் வலி தொய்ந்த முக பாவனையுடனும், எதுவும் நடக்கவில்லையே வாழ்க்கையில் ஜெயிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் படம் முழுவதும் அற்புதமாக நடித்துள்ளார்.

தனது கதையை மட்டும் தயாரிப்பாளர் விலைக்கு கேட்கும் போதும், தனது கோபத்தை மனைவியுடன் மட்டுமே காட்ட முடியும் என்ற நிலையில், மனைவியை அடிக்கும் போது, பின்னர் மன்னிப்பு கேட்கும் போது, கிளாப்ஸ் அள்ளுகிறார்.

அமுதாவாக நடித்துள்ள ஷீலா ராஜ்குமார், நீண்ட நாட்களுக்கு பிறகு சோபனாவை நினைவு படுத்துகிறார். வீடு பார்க்க திடீரென நுழையும் மர்ம ஆசாமிகளிடமும், ஹவுஸ் ஓனராக நடித்துள்ள ஆதிரா வசைபாடும் போதெல்லாம், ஏதோ தப்பு செய்து விட்ட மாணவனாகவும், ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய பக்க பலம் என்றால், பின்னணி இசையே அமைக்காமல், அந்த இடங்களில் ஒலிக்க வேண்டிய பேக்ரவுண்ட் ஆம்பியன்ஸ் சத்தங்களையே படத்திற்கான இசையாக மாற்றிய விதத்திலும் செழியன் ஸ்கோர் செய்துள்ளார்.

நாம் துயரத்தில் இருக்கும்போது, பின்னாடி வந்து இளையராஜாவோ, ஏ.ஆர். ரஹ்மானோ நிஜத்தில் இசையமைக்க போவதில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குநர்.

மைனஸ்:

வீடு தேடி அலையும் கதையை ஆண்டவன் கட்டளை படத்திலும், மேலும், பல படங்களிலும் யூடியூப் வீடியோக்களிலும் அதிகம் பார்த்துவிட்டதால், வேறு எதாவது கதைக் களத்தில் படம் நகர்ந்திருக்கலாமோ என்ற உணர்வு சிலருக்கு தோன்றலாம்.

வீட்டு உரிமைக்காரப் பெண் வந்து அதட்டும் போது, அமைதியாக பயந்து கொண்டு நாயகி நிற்பதற்கு பதிலாக சிறிய எரிச்சலை முகத்தில் காட்டியிருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும் என்பது எங்களது கருத்து.

மற்றபடி அனைவரும் திரையரங்கில் சென்று, செழியனின் டுலெட் படத்தை பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கான ஒரு பாடம் அல்லது ஒரு உணர்வு, மனிதம் பற்றிய புரிதல் போன்ற தத்துவ விசயங்களும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

உலகமே கொண்டாடிய டுலெட் படத்தை தமிழ் மக்களும் திரையரங்குகளில் கொண்டாட வேண்டும். கலை படைப்புகள் என்றாலே அது சிலருக்கான படம் என்று வெகு ஜன மக்கள் ஒதுக்கினால், இதுபோன்ற சிறந்த கலைப் படைப்புகள் பெருகாமல், வெறும் மசாலா படங்கள் என்ற அரைத்த மாவை அரைக்கும் படங்களே உங்கள் தியேட்டர் அனுபவங்களை காவு வாங்கும் என்ற எச்சரிக்கையும் செய்துகொள்கிறோம்.

சினி ரேட்டிங்: 4.5/5.

seithichurul

Trending

Exit mobile version