உலகம்

டி-ஷர்ட்டால் வந்த வினை.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய விவகாரம்.. பெரிதாகும் கனடா-சீனா மோதல்

Published

on

பீஜிங்: பீஜிங்கில் இருக்கும் கனடா தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ஆர்டர் செய்த டி-ஷர்ட், சீனாவின் கொரோனா வைரஸ் கையாண்ட விதத்தை கிண்டல் செய்யும் விதமாக உள்ளது என கூறி கனடா மீது சீனா புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஹுவாவே நிறுவனத்தின் அதிகாரி மென்ங் வான்சோவ் கனடாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கில் அவரை கைது செய்து அமெரிக்கா கொண்டுவர திட்டம். ஆனால் அதற்குள்ளாகவே சீனா இதில் தலையிட்டு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கூடாது என கேட்டுக்கொண்டது. ஆனால் இதற்கு கனடா மறுப்பு தெரிவிக்கவே உடனே சீனா இரண்டு கனடா நாட்டினரை உளவு நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்ததாக கூறி அவர்களை வைத்து கனடாவிடம் பேரம் பேச தொடங்கியது.

மென்ங் வான்சோவை தங்களிடம் ஒப்படைத்தால் கனடா நாட்டினரை விடுவிக்க தயார் என்றும் சீனா கூறியது. மேலும் கனடாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு திடீரென மரண தண்டனையும் நிறைவேற்றியது. கனடாவை சேர்ந்த சில பொருட்களுக்கு தடை விதிப்பது என இரு நாடுகளுக்கும் இடையே உறவு ஏற்கனவே மோசமான நிலையில் சென்றுகொண்டு இருக்கும் போது இப்போது ஒரு சாதாரண டீ சர்ட் விவகாரம் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் ஆகிவிட்டது.

பெய்ஜிங்கில் இருக்கும் கனடா தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், வௌவ்வால் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் ஆர்டர் செய்ததாக ஒரு டி-ஷர்ட் தயாரிப்பாளர் சீன இணையத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் எழுந்தது. சீனாவை பொறுத்த வரை, கொரோனா வைரஸ் விஷயத்தில் யாராவது அந்த நாட்டை குறை கூறினால் மிக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த டி-ஷர்ட் சீனாவை கிண்டல் செய்யும் விதமாக அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து சீனாவுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version