உலகம்

நியூசிலாந்தில் புயலை தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

Published

on

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

#image_title

நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் வரலாறு காணாத பேய் மழை பெய்து ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் ‘கேப்ரியல்’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த பயங்கர புயலால் ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

மணிக்கு பல மைல் வேகத்தில் சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து, பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

#image_title

இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்தது. இந்நிலையில் தொடர் சோகமாக நியூசிலாந்தின் லோயர் ஹட் பகுதியில் இருந்து வடகிழக்கே 78 கி.மீ. தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version