உலகம்
ரூ.1.21 கோடி மதிப்புள்ள காரின் விலை வெறும் 14 லட்சம் தானா? இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
ரூபாய் 1.21 கோடி மதிப்புள்ள சொகுசு காரின் விலை வெறும் 14 லட்சம் என விளம்பரம் செய்யப்பட்டதால் போட்டி போட்டுக்கு கொண்டு அந்த காரை முன் பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சொகுசு கார்களில் ஒன்று அமெரிக்காவில் தயாராகும் போர்ஷே கார் என்பது அறிந்ததே. போர்ஷே பனாரம்மா என்று கூறப்படும் மாடல் கார் அமெரிக்காவில் 92 ஆயிரம் டாலருக்கு விற்பனை ஆகிறது என்பதும் சீனாவில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் டாலருக்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இந்த காரை வாங்குவதற்கு செல்வந்தர்கள் மிகவும் விருப்பப்படுவார்கள் என்பதும் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த போர்ஷே காரின் டீலர்ஷிப் நிறுவனம் சமூக வலைதளத்தில் இந்த காரின் விலை குறித்து விளம்பரம் செய்தது. அப்போது 1,48,000 டாலர் என்று விளம்பரம் செய்வதற்கு பதிலாக வெறும் 18000 டாலர் என விளம்பரம் செய்தது. அதாவது 1,48,000 என்ற எண்ணில் 4 என்ற எண் மட்டும் விடுபட்டு போய்விட்டது. 1,48,000 டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி மதிப்பு என்ற நிலையில் வெறும் 18000 டாலர் அதாவது வெறும் ரூ.14 லட்சம் விலைக்கு கிடைக்கிறது என்று அறிந்தவுடன் சீனாவில் உள்ள பலர் அந்த காரை முன்பதிவு செய்வதற்கு போட்டி போட்டனர்.
ஒரு சில நிமிடங்களில் 500க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. என்றுமே இல்லாதவாறு திடீரென இவ்வளவு கார்கள் முன்பதிவு செய்யப்படுவது ஏன் என்று சந்தேகத்தில் டீலர்ஷிப் நிறுவனத்தின் அதிகாரிகள் சோதனை செய்தபோதுதான் தவறாக விலை குறிப்பிடப்பட்டதை அறிந்தனர்.
இதனை அடுத்து வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த டீலர்ஷிப் பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியது. வெறும் 14 லட்சத்துக்கு போர்ஷே காரை தான் வாங்க போவதாக பலர் சமூக வலைதளத்தில் பெருமையாக பதிவு செய்த நிலையில் ஒரே நாளில் அவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.