கிரிக்கெட்

பெங்களூர் அணியை துவம்சம் செய்த கொல்கத்தா அணி அபார வெற்றி!

Published

on

நடப்பு ஐபிஎல் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை துவம்சம் செய்த கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Shardul Thakur

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ் (57), ரிங்கு சிங் (46), ஷர்துல் தாக்கூர் (68) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. குறிப்பாக ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்து அதிரடி தாண்டவம் ஆடினார். மேலும் இந்த போட்டியில் பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் 23 ரன்கள் உதிரியாக வழங்கினர்.

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணியால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பெங்களூர் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டூபிளசிஸ் 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்கிரவர்த்தி 3.4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்த ஷர்துல் தாக்கூர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Trending

Exit mobile version