தமிழ்நாடு

ரஜினி பெயரை கூறி ரூ.30 கோடி மோசடி: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது புகார்!

Published

on

ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை தன்னிடம் இருப்பதாகவும் அதை கொடுப்பதாகவும் கூறி மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் ரூபாய் 30 கோடி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பணம் பெற்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் உரிமை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மலேசிய நிறுவனம் சென்னை காவல் துறையில் புகார் அளித்து உள்ளது. அந்த புகாரின் பேரில் மத்தியஸ்தம் பேசப்பட்டதில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் திருப்பி தந்து விடுவதாகவும் மீதமுள்ள 15 கோடிக்கு காஞ்சனா 3 மற்றும் ’நான் ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களில் வெளிநாட்டு உரிமையை தருவதாகவும் கூறி ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காஞ்சனா 3 படத்தின் உரிமையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும் ’நான் ருத்ரன்’ என்ற படம் ஆரம்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி முரளி கொடுத்த 5 கோடி ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்து விட்டது.

எனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அடுத்தடுத்து மோசடி செய்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையினர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version