தமிழ்நாடு
பால்டாயில் உதயநிதி: நடிகை விந்தியா அதிரடி பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது எய்ம்ஸ் ஒத்த செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பால்டாயில் புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்துள்ளார்.
எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒத்த செங்கலை காண்பித்து ஈரோட்டில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், இது தான் அதிமுக-பாஜக கூட்டணி மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. ஒரு செங்கல் தான் உள்ளது. மோடி அறிவித்த இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்து, இந்த ஒரு செங்கல் தான் உள்ளது என்றார். தொடர்ந்து அதிமுகவை கடுமையாக விமர்சித்த அவர் சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்து பதவி பெறும் புகைப்படத்தையும் காட்டி பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா, திமுக அரசை விமர்சித்து பேசினார். தொடர்ந்து உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பால்டாயில் புகைப்படத்தை காட்டி, இந்த முறையும் ஒத்த செங்கலை தூக்கி கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு நீங்க இந்த பால்டாயில் புகைப்படத்தை காட்டி இந்த தெருவில் இருந்தே விரட்டி விட்டிருங்கள்.
இனிமேல் வரும்போது அவர் ஸ்டாலின் வாரிசு உதயநிதி இல்லை, ஒத்த செங்கல் உதயநிதி, பால்டாயில் உதயநிதி என்று அதிரடியாக பிரச்சாரம் செய்தார் அவர்.