இந்தியா
திருமணத்திற்காக முழு விமானத்தை புக் செய்த மணமகன்.. செலவு எவ்வளவு?
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சடங்காக மட்டும் பார்க்காமல் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுவார்கள் என்பதும் அவரவர் வசதிக்கேற்ப திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் கிட்டத்தட்ட அனைவரும் விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே.
திருமணத்தை சிக்கனமாக செய்ய வேண்டும் என்றும் ஒருநாள் கூத்துக்காக அதிகமாக செலவு செய்து அதன் பிறகு திருமணத்திற்கு பின்னர் திண்டாட வேண்டாம் என்றும் பலர் அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் திருமணம் செய்ய போகிறேன் அந்த திருமணத்தை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மணமகன் ஒருவர் தனது உறவினர்களை திருமணத்திற்காக அழைத்து செல்வதற்கு ஒரு முழு விமானத்தை புக் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணமகன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் எனது முழு குடும்பத்தையும் ஒரு விமானத்தில் அழைத்துச் செல்கிறேன், திருமண இடத்திற்கு ஒன்றாக பயணிக்கும் இந்த மகிழ்ச்சி எதிலும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் முழு குடும்பமும் ஒட்டுமொத்தமாக ஜாலியாக பாட்டு பாடி ஆட்டம் போடும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
புவன் என்ற அந்த மணமகன் கையில் மெஹந்தி உடன் உறவினர்களுடன் ஆட்டம் போடும் காட்சியை பார்க்கும் போது பலருக்கு ஆச்சரியமாகவும் சிலருக்கு பொறாமையாகவும் உள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மெண்டுவில் நடந்த இந்த திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை 1.7 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளதாகவும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ள பலர் நானும் எனது உறவினர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறேன், இதற்காக எவ்வளவு செலவாகும்? எவ்வளவு தூரம் சென்றால் எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவிக்கவும் என்று தெரிவித்துள்ளார். எல்லா விமான நிறுவனங்களும் ஒரு நபர் அல்லது இரு நப ருக்கு மட்டுமே விலையை காட்டுகின்றன எந்த ஒரு விமான நிறுவனமும் முழு விமானத்தை புக் செய்ய எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து மணமகனை திருமணம் செய்ய போகும் மணமகள் கொடுத்து வைத்தவர் என்றும் திருமணத்தை இவ்வளவு பிரமாண்டமாக நடத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/p/Cn_7HAopJNe/