சினிமா செய்திகள்
ஹாலிவுட் போராட்டத்தால் பணிந்தது ஆஸ்கர் குழு!
![oscars - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/oscars.jpg)
ஹாலிவுட் சினிமாவிற்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வரும் பிப்ரவரி 24ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களிடையே கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.
முதன்முறையாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான பிளாக் பாந்தர் படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது தொடங்கி, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒப்பனை உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருது நேரலையில் வழங்காமல், விளம்பர இடைவேளையில் வழங்கலாம் போன்ற முடிவுகளை ஆஸ்கர் பரிந்துரைக் குழு எடுத்தது.
ஆனால், இதற்கு ஒளிப்பதிவாளர் சங்கம், பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், வேறு வழியின்றி 24 பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதுகள் நேரலையிலேயே முன்பை போலவே மாற்றமின்றி வழங்கப்படும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.