உலகம்
ஆப்கனில் விமானத்தில் இருந்து கீழே விழுந்தது கால்பந்து வீரரா? உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் படிகளிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. அவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியின் வீரர் ஒருவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேற விரும்புகின்றனர். இதனை அடுத்து எந்த விமானம் கிளம்புகிறதோ, அந்த விமானத்தில் ஏறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து உள்ளனர் என்பதும் பலர் ஓடும் விமானத்தில் ஏற முயன்றனர் என்பது குறித்த வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்த விமானம் ஒன்றில் ஒரு சிலர் ஏற முயன்றனர். சிலர் படிக்கட்டிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தனர். அவ்வாறு பயணம் செய்தவர்களில் ஒருவரான ஆப்கன் நாட்டின் தேசிய கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி என்று கூறப்படுகிறது.
ஜக்கி அன்வாரி நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், உயிரிழந்தது கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி தான் என்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி செல்ல முயன்ற இளம் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு தேவையான விமான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.