தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை இடம்? அதிகாரபூர்வ அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும் ஜிகே மணி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது