சினிமா செய்திகள்
உலக சாதனை படைத்த அஜித்தின் ‘தக்ஷா’ ட்ரோன்!
நடிகர் அஜித், சினிமாவை தாண்டி பைக் ரேஸிங், போட்டோகிராஃபி, ட்ரோன் டெக்னாலஜி என பலவற்றில் அசத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் நடைபெற்ற மருத்துவ சேவைக்கு உதவும் ஆம்புலன்ஸ் ட்ரோன் போட்டியில், அண்ணா பல்கலைக் கழகத்தின் தக்ஷா குழுவும் பங்கேற்றது. இக்குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் உள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்டே.
உலகம் முழுவதிலுமிருந்து 55 ட்ரோன்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 ட்ரோன்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா குழு இந்த போட்டியில், இறுதி வரை சென்று 2-ம் இடத்தை தனதாக்கியது.
மேலும், தொடர்ந்து 6 மணி நேரம் பறந்த தக்ஷா ட்ரோனின் சாதனை உலக சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “சர்வதேச வான்வெளி போட்டி குழு” இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.