தமிழ்நாடு
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா: ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதிலடி!
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று அதிமுக, திமுக இரண்டு அணிகளுமே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியது. இதனையடுத்து இரு கூட்டணிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக திமுக, காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதில் அளித்தார். அதில் மோடி அவர்களே, அதிமுக – பாஜக – பாமக கூட்டணிதான் மதவாத, சாதியவாத, சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளையடிப்பது உங்கள் இலட்சியம். உங்களை விரட்டி நாட்டைக் காப்பாற்றுவதே எங்கள் இலட்சியம் என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்துக்கு தற்போது பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், ஆமாம் முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. விசிக மற்றும் கொமதேக, ஐஜேகே இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா என சாடியுள்ளார்.