தமிழ்நாடு

சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் விசாரணை தொடர்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகம் என சுமார் 189 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை என கூறப்பட்ட இந்த சோதனை ஐந்து நாட்கள் நீடித்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதினர்.

இதனையடுத்து டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்திக்கொள்ள வருமான வரித் துறைக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. மேலும் இந்த விசாரணைக்கு 5 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது சிறை நிர்வாகம்.

இதனையடுத்து நேற்று காலை வீரராகராவ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கினர். சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஐந்து பைகளில் எடுத்து வந்து அவர்கள் விசாரித்தனர்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையானது 8.30 மணி நேரம் நடைபெற்று மாலை 7.30 மணியளவில் நிறைவுற்றது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சசிகலாவிடம் பல்வேறு கேள்விகளை வருமான வரி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது. தேவைப்பட்டால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version