இந்தியா

கர்நாடகாவில் 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த ஒரு சில மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அம்மாநில முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிடார், மணிபால், துமாகுரு ஆகிய ஏழு நகரங்களில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு என்றும் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அமலில் இருக்குமென்றும் இருபதாம் தேதிக்குப் பிறகு நிலைமையை பொறுத்து இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பெங்களூரு மாநகரில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து அந்த நகருக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளையும் முதல்வர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் நகரம் முழுவதும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும் முகக் கவசங்கள் கிருமிநாசினி மற்றும் தனிமனித இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version