இந்தியா

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவு- ஒருவர் ஐ.சி.யூ.வில் அனுமதி!

Published

on

டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு, தலைவலி, ரேஷஸ், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம்.

நேற்று முதல் இந்தியாவில் கோரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு அனுமதி கொடுத்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் நேற்று முதல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசித் திட்டத்தின்படி ஒருவருக்கும் இரண்டு முறை ஊசி போடப்படும்.

கோவிஷீல்டு, அனைத்து வித பரிசோதனைகளையும் முடித்துள்ளது. அதே நேரத்தில் கோவாக்ஸின், இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Trending

Exit mobile version