தமிழ்நாடு

அதிமுக ஆட்சி நீடிக்குமா? 5 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஆலோசனை: அரசியல் பரபரப்பு!

Published

on

அதிமுக எம்எல்ஏக்களான கலைச்செல்வன், பிரபு, இரத்தினசபாபதி மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 5 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி இரத்தின சபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர். இதில் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இந்த 5 எம்எல்ஏக்கள் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளில் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள்தான் அதிமுக ஆட்சி நீடிக்குமா அல்லது ஆட்சி மாறுமா என்பதை தீர்மானிக்கும். இந்த சூழ்நிலையில் 5 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version